Thursday 2nd of January 2025 02:47:11 PM GMT

LANGUAGE - TAMIL
.
புலம் பெயர்ந்தோருக்கான புதிய அலுவலகம் - நா.யோகேந்திரநாதன்

புலம் பெயர்ந்தோருக்கான புதிய அலுவலகம் - நா.யோகேந்திரநாதன்


அண்மையில் தொழில் வல்லுனர்கள் அமைப்பின் 2022 விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கு ஆற்றிய உரையின்போது புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போரை இலங்கையில் முதலீடு செய்வதற்கான தனது முயற்சிகள் தொடர்பாக விரிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

அதில் முக்கியமானது தான். வெகுவிரைவில் புலம்பெயர்ந்தோருக்கான அலுவலகம் ஒன்றை அமைத்து அதன் மூலமாக புலம்பெயர்ந்தோரை இலங்கையின் முதலீடு செய்வதற்கான நிலைமைகளை உருவாக்குவதாகும். மேலும் அவர் தனது உரையில் புலம் பெயர்ந்தோர் முதலீட்டு ஆதாரங்களைக் கொண்டுள்ளவர்கள் எனவும், நாட்டை எல்லோரும் சேர்ந்தே இன்றைய நெருக்கடியிலிருந்து மீட்டு வளர்ச்சிப் பாதையில் முன்கொண்டு செல்ல வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்ததுடன் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் முகமாகப் புதிய அரசியலமைப்பை உருவாக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

2002 - 2004 காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியபோதும், 2015 நல்லெண்ண ஆட்சிக் காலத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டபோதும் இனப்பிரச்சி்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்போவதான ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியவர் ரணில் விக்கிரமசிங்க. ஆனால் புலிகள் அமைப்பில் பிளவை உருவாக்கிப் பேச்சுகளை குழப்பியதையும், 2015 புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளின் போது அதை இழுத்துப் பறித்துப் பயனற்றதாக்கியதையும் நாம் மறந்துவிட முடியாது.

தற்சமயம் அவரால் முன்வைக்கப்படும் புதிய அரசியலமைப்பின் மூலம் இனப்பிரச்சினைத் தீர்வு என்ற வாக்குறுதி இங்கு புலம் பெயர் தமிழர்களை முதலீடு செய்ய வைக்கும் ஒரு மாய மான் தந்திரமோ எனக் கேட்கத் தோன்றுகிறது. எந்தவொரு விஷயத்தையும் மறுக்காமல் ஏற்றுக்கொண்டு விட்டு பின் அதை இழுத்துப் பறித்து நீர்த்துப் போகவைத்துச் செயலிழக்க வைப்பது என்பது ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கைவந்த கலையாகும்.

இதன் முன்னோடி நடவடிக்கையாக பல புலம்பெயர் அமைப்புகளினதும் தனி நபர்கள் மீது விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டுள்ளன. எனினும் சில புலம்பெயர் அமைப்புகளின் மீதும், தனி நபர்கள் மீதும் போடப்பட்ட தடைகள் தொடர்கின்றன.

வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் அமைப்புகளோ தனி நபர்களோ ஒரே நோக்கம் கொண்டவர்களாகவே ஒரே மாதிரியானவர்களோ அல்ல.

புலப் பெயர்வின் ஆரம்ப காலத்தில் அங்கு சென்றவர்களில் சிலர் நேர்மையாகவும், சில சந்தர்ப்பங்களில் குறுக்கு வழிகளிலும் உழைத்துத் தங்களை முதலீட்டாளர்களாக்கி அங்கேயே பல நிறுவனங்களை நடத்துமளவுக்கு முன்னேறி விட்டவர்கள். இன்னும் சிலரோ விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்ட நிறுவனங்களை நிர்வகித்து வந்தவர்கள். விடுதலைப் புலிகளின் அமைப்புச் செயலிழந்த பின்பு அவர்களே அந்த நிறுவனங்களைத் தமதாக்கிக் கொண்டவர்கள். இவர்களிலும் சிலர் தென்னிந்திய சினிமாக்களை வாங்கி வெளிநாடுகளில் விநியோகிப்பது வர்த்தக ரீதியான சினிமாக்களைத் தயாரிப்பது போன்ற தொழில்களில் இறங்கிக் கோடிகோடியாகச் சம்பாதித்து வருகின்றனர். இது முதலாவது ரகம்.

இரண்டாவது தரப்பினர் சாதாரண தொழில்களைச் செய்து சாதாரணமாக வாழ்பவர்கள். இவர்களே போராட்ட காலத்தின் நிதியாதாரங்களாகவும், புலிகளுக்காதரவான ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்களையும் நடத்தியவர்கள். தற்சமயம் இவர்களின் ஒரு பகுதியினர் தாமும் தங்கள் பாடுமென அமைதியாகி விட்டனர். இன்னும் ஒரு பகுதியினர் இலங்கையின் இன ஒடுக்குமுறைகள், இன அழிப்பு நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் என்பவற்றுக்கு எதிராகப் பல்வேறு விதமான போராட்டங்கள், சட்டபூர்வமான நடவடிக்கைகள் என்பனவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்றாவது ரகம் ஒருசில விரல்விட்டு எண்ணக்கூடியவர்களாக இருந்தபோதிலும் சமூக வலைத்தளங்கள் மூலமும், இலக்கிய அமைப்பு, சமூக நீதிக்கான அமைப்புப் போன்ற சிறு சிறு நிறுவனங்கள் மூலம் தாம் ஒரு பிரமாண்டமான சக்தியாகக் காட்டி வருகின்றனர். இவர்களின் முழு நோக்கமும் விடுதலைப் புலிகளை வசைபாடுவதும் இலங்கையில் இடம்பெறும் முற்போக்கான விடயங்களை விமர்சனம் என்ற பேரில் கீழ்மைப்படுத்துவதுமாகும். இவர்களில் முன்னாள் இடதுசாரிகளில் சிலர் கார்ல் மாக்ஸ் பெயராலும் லெனின் பேராலும் புலிகளுக்கு வசை பாடுவதையும் மஹிந்த தரப்புக்குத் துதிபாடுவதையும் இலட்சியமாகக் கொண்டுள்ளனர்.

இந்த மூன்றாவது தரப்பினரைப் பொறுத்தவரையில் முதலீடு என்ற பக்கத்தில் எவ்வித பயனுமற்றவர்கள். ஆனால், இவர்கள் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் சர்வதேச மட்டத்திலும் இலங்கை ஆட்சியாளர்களின் அநீதிகளை நியாயப்படுத்துவதில் கணிசமான பங்களிப்பை வழங்குவார்கள். இதற்கான சன்மானம் அவர்களுக்கு இலங்கையின் புலனாய்வு முகவர்களால் வழங்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

இரண்டாவது தரப்பினர் மத்தியிலேயே தடை நீக்கப்படாத பட்டியலில் இன்னும் பலர் உள்ளனர். ஏனையோரில் சிலர் தங்கள் குடும்பங்களுக்கோ, உறவினர்களுக்கோ அனுப்பும் பணம் இலங்கைக்கு அந்நியச் செலாவணியாகக் கிடைக்கும். இது காலவரை உண்டியல் மூலம் பணம் அனுப்பியோர் இனி வங்கிகள் மூலமும் அனுப்பக்கூடும்.

ரணில் விக்கிரமசிங்கவும் ஏனைய அரச கூட்டமைப்புகளும் இலக்கு வைப்பது அந்த முதலாவது ரகத்தினரையே. அவர்களே முதலீடுகளை மேற்கொள்ளுமளவுக்கு நிதி ஆதாரங்களைக் கொண்டிருப்பவர்களாகும்.

இவர்களில் இருவர் ஏற்கனவே இலங்கையில் முதலீடு செய்ய முயற்சித்தும், இலங்கையில் அதிகாரத்திலுள்ள சிலரின் லஞ்சக் கோரிக்கைகளால் கைவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

எப்படியிருந்தபோதிலும் அவர்களின் முதலீடுகளுக்கும், வருவாய்க்குமான நம்பகமான உத்தரவாதம் இருந்தால் மட்டுமே அவர்கள் முதலீடு செய்வார்கள். நேற்றுவரை பயங்கரவாதிகளாகப் பார்க்கப்பட்டவர்கள், எதிர்காலத்தில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பயங்கரவாதிகளாக்கப்பட்டு அவர்களின் முதலீடுகள் பறிமுதல் செய்யப்படமாட்டாது என்பதை நம்ப முடியுமா?

ஒரு தொண்டு நிறுவனமான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தடை நீக்கப்படவில்லை. அது வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட கோடிக்கணக்கான பணமும் முடக்கப்பட்டது. ஒரு நிதி நிறுவனமான தமிழீழ வைப்பகத்தின் முள்ளிவாய்க்காலில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பல கோடி பெறுமதியான நகைகளுக்கு என்ன நடந்தது என இது வரைத் தெரியாது.

எனவே புலம்பெயர் அமைப்புகள் இன்று தடை நீக்கப்பட்டமையானது நியாயமான நோக்கத்துடனல்ல. முதலீடுகளைக் கவர்வதற்காக மட்டுமே என்பதைப் புரிந்துகொண்டு விழிப்புடன் செயற்படவேண்டும். புதிய அரசியலமைப்பின் மூலம் இனப்பிரச்சினைத் தீர்வு என்பது ஒரு மாயமான் என்பதும் புரிந்து கொள்ளப்படவேண்டும்.

எனவே புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் ஒரே அணியாக ஒன்றிணைந்து இனப்பிரச்சினைத் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம், வடக்குக் கிழக்கில் இடம்பெறும் காணி, மத ஆக்கிரமிப்புகள் என்பன தொடர்பாக திட்டவட்டமான சில நிபந்தனைகளை முன்வைத்து அவற்றுக்குச் சாதகமான ஒரு சூழல் தோன்றும் நிலையில் இங்கு முதலீடு செய்வது பற்றி ஆலோசிக்கப் போகிறார்களா? அல்லது ரணில் விக்கிரமசிங்கவின் புலம் பெயர் தரப்புகளுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தி ஒருசாராரை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் தந்திரோபாயத்திற்குப் பலி போகப் போகிறார்களா? என்பது தான் இப்போது தமிழ் மக்களின் கேள்வியாக உள்ளது.

கடந்த காலங்களைப் போன்று கிடைக்கும் சந்தர்ப்பங்களை புத்திபூர்வமான முறையிலும் தந்திரோபாய வழிமுறைகள் ஊடாகவும் பயன்படுத்த தவறிய குற்றத்தை மீண்டும் புலம்பெயர் தரப்புகள் மேற்கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடம் உள்ளது.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்

23.08.2022


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை, உலகம், கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE